தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படியும், வீட்டு வசதித் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படியும் திருச்சி வீட்டு வசதி வாரியப் பிரிவு சார்பில், முழுத்தொகையும் செலுத்திய வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதிவரை மூன்று நாள்கள் விற்பனைப் பத்திரம் வழங்கும் சிறப்பு முகாமின் தொடக்க நிகழ்ச்சி திருச்சி காஜாமலை காலனியில் உள்ள வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்து, வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரத்தினை வழங்கினார். திருச்சி வீட்டு வசதிப் பிரிவின் சார்பில், திருச்சி நவல்பட்டில் வீடு, மனைகள், கரூர் காந்தி கிராமத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்ட மனைகள், அரியலூர் குரும்பஞ்சாவடியில் சுயநிதித் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடுசெய்யப்பட்ட வீடுகள், புதுக்கோட்டையில் ராஜகோபாலபுரம், பூங்கா நகரில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையும் செலுத்திய 287 பேருக்கு இந்த சிறப்பு முகாமின் மூலம் விற்பனைப் பத்திரம் வழங்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறாத இந்தச் சிறப்பு முகாமினைத் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இந்த மூன்று நாள்கள் சிறப்பு முகாம் நிகழ்வாக நடத்தப்பட்டு முழுத் தொகையையும் செலுத்தி விற்பனைப் பத்திரம் வழங்கப்படாத ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படுகிறது.
திருச்சி நவல்பட்டில் மனை ஒதுக்கீடு பெற்ற தமிழரசி, "நான் நவல்பட்டில் மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திவிட்டேன். எனக்கு விற்பனைப் பத்திரம் வழங்கப்படாமல் இருந்தது.
தற்போது முதலமைச்சரின் உத்தரவின்படி எனக்கு விற்பனைப் பத்திரம் கிடைக்கப்பெற்றது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இவரைத் தொடர்ந்து நவல்பட்டில் மனை பெற்ற விராலிமலையைச் சார்ந்த வெண்ணிலா, "முதலமைச்சரின் உத்தரவால் நான் வாங்கிய மனைக்கான விற்பனைப் பத்திரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எனது மனைக்கு முழு உரிமையும் பெற்றுவிட்ட மன உணர்வில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.