திருச்சி - காஜாமலை ஜேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர், சாமிநாதன்(58). இவர் பெரம்பலூரிலுள்ள கனரா வங்கி கிளையின் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம்(ஜூலை 11) இவரது வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டிலிருந்த 54 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதேபோல் அதேபகுதி அமராவதி தெருவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் கிறிஸ்டோபர்(37). நேற்று முன் தினம் (ஜூலை 11) இரவு அவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பீரோவிலிருந்த ரூ.20 ஆயிரம் பணம், நகை, செல்போன், ஐ-பாட், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து நேற்று (ஜூலை12) காலை வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதன், கிறிஸ்டோபர் இருவரும் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கே.கே. நகர் காவல் துறையினர், கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.