திருச்சி தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகத்தில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
இதில், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தேவராஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் (ஆக.25), நாளையும் நடைபெறுகிறது.
இது குறித்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அஸ்லம் பாஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பிஎஸ்என்எல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களின் பங்கு முக்கியமானதாகும்.
இங்கு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 18 மாதக் காலம், நாடு முழுவதும் ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதற்காக பல கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 18 மாத ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். நிதியை காரணம்காட்டி ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது.
ஊதிய நிலுவை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. எனினும் இடையில் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. அதை உறுதியாக அமல்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: “மயக்க நிலையிலிருந்து 90 விழுக்காடு மீண்ட எஸ்.பி.பி.” - சரண்