திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் கரூர் மாவட்டம் இடையபட்டி பகுதிக்கு திருமண விழாவிற்கு சென்ற போது 21 வயதான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களின் பழக்கம் காதலாகவும் மாறியுள்ளது. தொடர்ந்து அவர்கள் தனிமையில் பழகிவந்ததால், அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கோபிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது குறித்த தகவலறிந்த அவரின் காதலி வையம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், திருமணத்தை தடுத்து நிறுத்தி மணமகனான கோபியை மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்திய மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய கோபி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தார்.
இதற்கிடையே, மணமகன் இல்லாமல் தடைபட்ட திருமணத்திற்கு வந்திருந்த இருதரப்பு உறவினர்கள், மணப்பெண்ணின், அவரின் பெற்றோர் சம்மதத்துடன் கோபியின் இளைய சகோதரர் அஜித்திற்கு மணப்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.