திருச்சி மாவட்டம் வயலூர் அருகே எட்டரைக் கோப்பு கிராமத்தில் பாஜக சார்பில் இன்று(ஜன.10) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கலந்து கொண்டார். மேலும் குஷ்புவைப் பார்க்க ஏராளமான மக்கள் கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.
அப்போது காவல்துறையின் நடவடிக்கையால் பாஜக மகளிர் அணி நிர்வாகி ஒருவர் தடுமாறி கீழே விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அருகிலிருந்த மகளிரணி நிர்வாகிகள், அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து நடிகை குஷ்புவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் பதறி அடித்துச் சென்ற குஷ்பு, அப்பெண்ணிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் காவல்துறையினர் தள்ளிவிட்டதால் தான் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறிய குஷ்பு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நடிகை குஷ்பு கலந்துகொண்ட விழாவில் மகளிர் அணி நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.