திருச்சி: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அவர் 100வது தொகுதியாக நேற்று (நவ.8) மாலை திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் பகுதியில் இருந்து நடைபயணத்தை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "என் மண் என் மக்கள் யாத்திரையில் 100வது தொகுதியாக ஶ்ரீரங்கம் அமைந்துள்ளது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒத்தி வைத்து, 100வது தொகுதியாக அரங்கநாத பெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
மருது சகோதரர்கள் எப்போது ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து ஶ்ரீரங்கம் கோயில் மதில் சுவரில் ஜம்பு தீவு பிரகடனத்தை ஒட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய அறைகூவலை விடுத்தார்கள். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதே ஶ்ரீரங்கம் கோயிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர். கடவுளை நம்புகிறவன் முட்டாள்; ஏமாளி, அதனால் கடவுளை யாரும் நம்பாதீங்கன்னு தமிழகத்தில் இருக்கிற எல்லா கோயில்களிலும் இதேபோல ஒரு கம்பத்தை வைத்து பலகையை வைத்துள்ளனர்.
ஆனால், இந்துக்கள் நாம் அமைதியான வழியில் அறவழியில் வாழ்க்கையை வாழ்கிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி வரும்பொழுது, முதல் வேளை அந்த கம்பத்தை அப்புறப்படுத்துவதுதான். ஶ்ரீரங்கம் கோயிலின் முன்பாக உள்ள, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என சொல்லியவரின் சிலையை பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே அகற்றிக் காட்டும்.
தமிழகத்தில் உள்ள கோயில்கள் முன்னால் ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்களின் சிலைகள் மற்றும் நம்முடைய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுடைய சிலைகளை வைப்போம்.
அதேபோல, இந்து அறநிலையத்துறை என்கிற அமைச்சரவையும் இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசிநாள், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளாக இருக்கும். அன்று மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடனம் போல, இது என் மண் என் மக்கள் யாத்திரையின் பிரகடனம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு.. மிசோரம், சத்தீஸ்கரில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம்!