கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையை மீறி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொட்டப்பட்டியில் இன்று அதிகாலை பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்திய பாஜக பிரமுகர் அயோத்தி கண்ணனிடம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த தடை இருப்பதால் சிலையை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த பாஜகவினர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல் துறையினர் வருவாய்துறைக்கு அளித்த தகவலின்பேரில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் காவல் துறை உதவியுடன் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று அருகில் உள்ள குளத்தில் கரைத்தனர்.
முன்னதாக, திருச்சியை அடுத்துள்ள சூளியாப்பட்டி, சின்னசமுத்திரம், வையம்பட்டி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
இதன் காரணமாக மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.