திருச்சி: முசிறி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் மதுபாலா. இவரது கணவர் தர்மலிங்கம். மதுபாலா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியாக உள்ள காவலர் மதுபாலாவிற்கு காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்கள் வளைகாப்பு விழா நடத்திட முடிவு செய்தனர். இதையடுத்து வளைகாப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் சக காவலர்கள் முன்னிலையில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின், காவலர் மதுபாலாவிற்கு கன்னத்தில் சந்தனம் தடவி, நெற்றியில் குங்குமம் இட்டு நளுங்கு வைத்து, கைகளில் வளையல் அணிவித்து வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார்.
பின்னர் 5 வகை கட்டு சாதம், கூட்டு பொரியலுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. கர்ப்பிணி பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து தங்கள் வீட்டு மகளைப் போல பாவித்து வளைகாப்பு விழா நடத்தியது வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் வைக்க கோரிக்கை