திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், உர விலை உயர்வு, தொடரும் மின் வெட்டு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.
ஆனால், போராட்டம் நீடித்ததால் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளுவாக மாறியது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ