தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, பழங்குடி சீர்மரபினர் சாதி சான்றிதழ் பிரச்னை தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் வளர்மதியை சந்திப்பதற்காக உறையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அமைச்சர் வளர்மதி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தீரன் நகரில் நடைபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வு அறை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். சிறிது நேரம் அங்கு காத்திருந்த அய்யாக்கண்ணு தரப்பினர், திடீரென அமைச்சர் வளர்மதி வீடு முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக வாட்ஸ் அப் குழுக்களில் தகவலை பரப்பினர்.
இதையடுத்து வளர்மதி வீட்டிற்கு காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என அனைவரும் படையெடுத்தனர். பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் வளர்மதி வீடு திரும்பினார். பின்னர் அமைச்சர் வளர்மதியின் வீட்டில் உள்ள அலுவலக அறையில் அய்யாக்கண்ணு, நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில்,” பழங்குடி சீர்மரபினருக்கு மத்திய அரசு ஒரு சான்றிதழும், மாநில அரசு ஒரு சாதி சான்றிதழும் வழங்குகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு சாதி சான்றிதழ்தான் தரவேண்டும். இரட்டை சான்றிதழ் முறை கூடாது. மாநில சீர்மரபினர் துறைக்கு வளர்மதி அமைச்சர் என்பதால் அவரை சந்தித்து முறையிட வந்தோம். இதுகுறித்து அவர் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடி பழங்குடி சீர்மரபினர் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். இல்லையென்றால் எதிர்த்து வாக்களிப்போம் ” என்றார்.
இதையும் படிங்க:
தை அமாவாசை: மதுரை டூ ராமேஸ்வரம்.... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி