திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே பெல் நகரில் பிரபல தனியார் வங்கியின் ஏ.டி.எம். செயல்பட்டுவருகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏ.டி.எம். மையத்தில் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மருது (வயது 60) என்பவர் காவலாளியாக பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஏடிஎம்மில் பணமெடுக்க வருவதுபோல் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், காவலாளி மருதுவைத் தக்கிவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் தொடுதிரை, கீ போர்டு உள்ளிட்டவைகளை உடைத்த போதிலும், பணம் இருக்கும் பெட்டகத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் காவலாளி மயங்கி கிடப்பதைக் கண்டு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஏடிஎம் காவலாளியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 4 பேர் கைது