திருச்சி: மணப்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு ஊராட்சிகளில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதிவு செய்திருந்த விவசாயிகளில் ஐம்பது பேருக்கு தென்னங்கன்றும், ஐந்து பேருக்கு கை தெளிப்பான், ஐந்து பேருக்கு உளுந்து, நூற்று இருபத்தைந்து பேருக்கு எட்டு வகையான காய்கனி விதைகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை,புத்தாக்கப் பயிற்சித் திட்டம் மற்றும் சுய உதவிக்குழு சார்பில் உழவர் கடன் அட்டை மூலம் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் இடுபொருட்கள் வழங்கத்தேவையான கடன் உதவியை வங்கிகள் மூலம் எப்படி பெறுவது,மத்திய அரசு உதவியுடன் குறைந்த வட்டியில் கடன், பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு, வங்கிக் கடன் எவ்வாறு பெறுவது உள்ளிட்டப் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
இதில் வேளாண்மை உதவி அலுவலர் ராமசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் ரோஸ்லின் சகாயமேரி, மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.மேலும் நிகழ்ச்சியின்போது விவசாயிகளுக்கு டீ-க்கு பதிலாக பருத்தி பாலும், எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக முளைகட்டிய பாசிப்பயிறும் வழங்கப்பட்டன.
மேலும் விவசாயிகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கிராமியப் பாடகர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் இயற்கை விவசாயம் மற்றும் விதைகள் நடவு செய்வதற்குரிய பருவகாலங்கள் குறித்த விழிப்புணர்வு பாடல்களையும் பாடி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிராமியப் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்பாடு செய்திருந்த வேளாண்துறையினரை விவசாயிகள் பாராட்டி சென்றனர்.இறுதியாக விவசாயியின் தோட்டத்தில் தென்னங்கன்று நட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
இதையும் படிங்க:கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்