திருச்சி: மாநகராட்சி உட்பட்ட வார்டு எண் 50 இல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தண்ணீர் தொட்டியை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நேற்று (ஜூன் 8) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திருச்சி சந்திப்பு அறிஸ்டோ மேம்பாலத்தின் ஒரு பகுதி 8 ஆண்டுகளுக்கு மேலாக தடைபட்டிருந்தது, கடந்த ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிற்கு பலமுறை அழுத்தம் கொடுத்த நிலையில், தற்பொழுது பணிகள் தொடங்கிவிட்டன. வேலைகள் முடிந்து 6 மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இனிவரும் நாட்களில் மத்திய மாநில அரசு புதிய மேம்பாலங்கள் கட்ட திட்டம் போடும்போது அந்தப் பகுதியில் எவ்வளவு வாகன போக்குவரத்து இருக்கின்றன. எவ்வளவு மக்கள்தொகை உள்ளது, வாகன அதிகரிப்பு போன்றவற்றை திட்டமிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 39 சீட்டும் பாஜக கைப்பற்றும் என நேற்று(ஜூன் 7) திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளது தொடர்பான கேள்விக்கு, கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. அதுபோல் அண்ணாமலைக்கும் உரிமை உண்டு. பகலில் கனவு கண்டாலும் பரவாயில்லை, ராத்திரியில் கனவு கண்டாலும் பரவாயில்லை. கனவு கண்டு கொண்டே இருக்கட்டும். கனவுக்குத் தடையா போடவா முடியும். ஆனால் அவை நிஜத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது.
ஆதீனங்கள் அரசியல் பேசுவது குறித்து கேட்டபோது, யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், ஆனால் அளவோடு பேசவேண்டும் நியாயமாகப் பேச வேண்டும். ஒரு மதத்தைச் சார்ந்து பேசுபவர்கள் இன்னொரு மதத்தைப் புண்படுத்தும் எண்ணத்தில் பேசக்கூடாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் மீது நம்பிக்கை இருக்கும். அவர்களது தெய்வத்தைப் பற்றி புகழ்ந்து பேசலாம், பாராட்டலாம். மத உணர்வுகளை புண்படுத்தாமல் மற்ற மதத்தை கொச்சைபடுத்தாமல் பேசவேண்டும். மற்ற வழிபாட்டுத் தலங்களை பற்றி புண்படுத்துவது மத நாயகர்களைப்பற்றி தவறாக பேசுவது கண்டனத்துக்குரியது.
மக்கள் ஒற்றுமையுடன் இருப்பது போன்று பேச வேண்டும். மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசி மதக்கலவரத்தை யாரும் தூண்டி விடாதீர்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் துணை போகக்கூடாது - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!