தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். கடந்த இரண்டு வருடங்களாக இவர் சிங்கப்பூரில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சிங்கப்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் தன்னுடைய மணி பர்சை விமானத்திலேயே தவறவிட்டார். ஆவணங்கள் மற்றும் உடமைகளை சோதனை செய்யும் பகுதிக்கு வந்தபோது பர்ஸ் மாயமாகி இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து விமான நிலைய அதிகாரியிடம் அவர் புகார் அளித்தார். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாததால் விஜயேந்திரன் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருப்பினும் புகாரை ஏற்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதற்கிடையே விமானத்தில் இருந்து மணி பர்சை ஊழியர்கள் கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் இருந்த ரூ 55,000 பணத்தை காணவில்லை என்பதை அறிந்ததும் விஜயேந்திரன் கடும் அதிர்ச்சியடைந்தார். அதனையடுத்து தனது பணத்தை காணவில்லை என விமான நிலைய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தபோது, விமான நிலைய அதிகாரிகள் விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
"இதுபோன்று நடந்து கொண்டால் அடுத்தமுறை திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு செல்லமுடியாத அளவுக்கு செய்து விடுவோம்" என்று மிரட்டியுள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் இருந்து வந்து இறங்கிய விஜயேந்திரன் இரவு வரை விமானநிலைய அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.