தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டலம் சார்பாக புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தனர். புதிதாக தொடங்கிவைக்கப்பட்ட மூன்று குளிர்சாதன பேருந்துகளில் இரண்டு பேருந்து திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கும் ஒரு பேருந்து திருச்சியிலிருந்து பழனிக்கும் இயக்கப்பட உள்ளது.
இந்தப் பேருந்துகளில் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரூ.225 ஆகவும் திருச்சியிலிருந்து பழனிக்கு ரூ.175 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் குளிர்சாதன வசதியுடன், ஒவ்வொரு சீட்டுக்கும் அலைபேசிக்கான சார்ஜர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து சென்னைக்கு மட்டுமே அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது முதன் முதலாக கோவைக்கும் பழனிக்கும் இயக்கப்படுகிறது.
இதையடுத்து வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு இதுவரை கண்டிராத வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போடறா வெடியா....லோக்கல் திரையரங்கு முதல் ஐமேக்ஸ் வரை 'பிகில்' ஆட்டம் வெறித்தனம்!