திருச்சி: மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகள் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு, குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையிலிருந்து ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து கானல் நீரையே கண்டு வந்த மணப்பாறை தொகுதி மக்கள் காவிரி குடிநீர் வழங்கிய அப்போதைய முதலமைச்சரை தொகுதி மக்கள் பாராட்டி அகமகிழ்ந்தனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பழுதாகி வழி நெடுகிலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.
இதனால் மணப்பாறை நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும், மக்கள் பல கட்ட போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி தற்காலிகமாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.
ஆனால் பழுதான கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை முழுவதுமாக புதுப்பிக்க இயலாத நிலை தொடர்வதால் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இருந்தும் குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நகராட்சி பகுதிகளில் ஒரு சில வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வார்டுகளில் உள்ளவை எல்லாம் பழுதான குழாய்கள் என காரணம் தெரிவிக்கப்பட்டு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான மாற்று ஏற்பாடாக நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கியது.
இருந்த போதும் போதிய அளவு குடிநீர் கிடைக்காத பொதுமக்கள் அப்பகுதி வார்டு உறுப்பினர்களிடம் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர்கள் 10 பேர் கூட்டத்திலிருந்து வெளியேறி நகராட்சி அலுவலக வாயில் முன்பு அமர்ந்து குடிநீர் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்களை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தை முடித்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்களிடம் நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர்கள் மாதத்திற்கு இரண்டு முறை தான் குடிநீர் கிடைப்பதாகவும் அதுவும் மஞ்சள் நிறத்தில் கிடைப்பதால் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களில் சிலருக்கு மஞ்சள்காமாலை போன்ற நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இது நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் நிகழ்ந்தது என்றும் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய, நகராட்சி ஆணையர் இன்னும் இரு தினங்களில் குடிநீர் வாரிய அலுவலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை குறித்து தீர்வு காண்பதாக உறுதி கூறியதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டியலின நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மடைமாற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது - அண்ணாமலை