திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(39). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருக்கும்போது, அவரது மனைவி மகாலட்சுமிக்கு(36) பணம் அனுப்பி வைத்துள்ளார். பணம் குறித்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மனைவியின் பேச்சு முன்னுக்கு முரணாக இருந்ததால், அவரின் நடத்தையில் பாலச்சந்தருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பாலச்சந்தர் சரணடைந்தார். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவது வீட்டுக்கு சென்ற காவலர்கள், ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மகாலட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலச்சந்தர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலச்சந்தர்-மகாலட்சுமி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.