திருச்சி: மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குதிரைகுத்திப்பட்டி. இங்கு தெற்குத் தெரு, நடுத்தெரு, கிழக்குத் தெரு மக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இதில் கிழக்கு தெருவுக்கு உட்பட்ட காலனி பகுதிக்குக் குடிநீர் வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் பல வருடக் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கோரிக்கை மீதான அவர்களின் தாகம் இன்று வரை தணியவில்லை. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு குதிரைகுத்திப்பட்டி காலனி பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக 9 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அரசு அமைத்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினால் தங்களின் தாகம் தணிந்து விடும் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தற்போது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து 10 வருடங்களாகி விட்ட நிலையில், மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு நாள் கூட அது பயன்படவில்லை. அதிகாரிகளும் இந்த நிகழ்வு குறித்துக் கண்டு கொள்ளவில்லை. இது குறித்த இவர்களின் கோரிக்கையைக் குடிநீர் வரி வசூலிக்கும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தேர்தலில் ஓட்டு வாங்கிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளான அப்பகுதி மக்கள் தங்களின் குடிநீர்த் தேவைக்காகத் தினமும் காலை வேளையில் சிலர் நடந்தும், சிலர் சைக்கிளிலும், வெகு சிலர் இருசக்கர வாகனத்திலும் தெற்கு தெரு பகுதியை நோக்கி குடங்களோடு படையெடுக்கத் தொடங்கினர்.
அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது குடிநீர் கிடைக்காததற்கான காரணம் என்னவென்று. குடிநீர் திறக்கப்பட்ட உடனேயே தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களின் வீடுகளில் மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை உறிஞ்சியுள்ளனர் என்பது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், வேண்டுமென்றால் நீங்களும் மின் மோட்டாரை வைத்து உறிஞ்சுங்கள் என மெத்தனப்போக்கோடு பதில் கூறியதாகக் கூறுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க வராத தண்ணீருக்கு வரி கட்டுங்கள் என வரிந்து கட்டி கொண்டு வீடு வீடாக வரி வசூலில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளனர் ஊராட்சி நிர்வாகத்தினர். நான்கு, ஐந்து ஆண்டுகளாக வரி செலுத்தியும் குடிநீர் வராத ஆத்திரத்தில் சிலர் நடப்பு ஆண்டுக்கான குடிநீர் வரி கட்ட முன்வரவில்லை என கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் விடாத குறையாக பேட்டியை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.