திருச்சி: துறையூர் அருகே மேட்டு சொரத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் தேதிமுதல் காணாமல்போனதாகத் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை துறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். புகாரின்பேரில் துறையூர் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர்.
முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரம்மானந்தன் தலைமையில், துறையூர் காவல் ஆய்வாளர் விதுன் குமார், உதவி ஆய்வாளர் திருப்பதி உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படை இந்த வழக்கு குறித்து விசாரணையும் நடத்திவந்தனர்.
அதில், துறையூர் பெரியார் நகரைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜேஷ் (23) என்பவர் சிறுமியைக் கடத்திச் சென்று சென்னையில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் சென்னையிலிருந்து ராஜேஷையும் சிறுமியையும் துறையூர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
அப்போது ராஜேஷ் தனது தந்தை ரெங்கநாதன் (48), தாய் உமா (42), நண்பர்கள் ஐந்து பேர் உதவியுடன் திருமணம் செய்துகொண்டது தெரிந்தது.
இதையடுத்து துறையூர் காவல் துறையினர் ராஜேஷ் உள்பட எட்டு பேரையும் கைதுசெய்தனர். சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சமூகமே நோய்வாய்ப்பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்!