திருச்சி: பாண்டிச்சேரி மாநிலம், மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர், செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்துவந்துள்ளார். செந்தில் குமரன், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரி கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கிக்கொலை செய்தும் விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செந்தில் குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இரவு நேரத்தில் அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொலையில் தொடர்புடைய புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம்(43), புதுச்சேரி கொம்பாக்கம் சிவசங்கர்(23), புதுச்சேரி கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா(23), புதுச்சேரி தனத்து மேடு வெங்கடேஷ்(25), கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப் (24), புதுச்சேரி கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23), புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) ஆகிய 7 பேர் இன்று திருச்சி நீதிமன்றம் ஜே.எம். எண் 3. நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு சரணடைந்தனர்.
விசாரித்த நீதிபதி ஏழு பேரையும் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை