திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி ஆலயம் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்புறம் முள்புதர் அடங்கிய பகுதி உள்ளது. இந்தப் பகுதியை நந்தவனமாக மாற்ற திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் அந்தப் பகுதியில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி இன்று நடைபெற்றது. அப்போது பித்தளைக் கலயம் ஒன்று மூடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் விரைந்துசென்று அந்தக் கலயத்தைக் கைப்பற்றி திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் பழங்கால தங்க காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை எண்ணும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 505 தங்க நாணயங்கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை மொத்தம் ஆயிரத்து 716 கிராம் எடை கொண்டதாகும்.
தற்போதைய சந்தை நிலவரப்படி இதன் மதிப்பு சுமார் 68 லட்சம் ரூபாய் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதையல் கைப்பற்றப்பட்ட தகவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
![புதையல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-05-gold-treasure-script-photo-7202533_26022020214830_2602f_1582733910_596.jpg)
இதையடுத்து அவர் வட்டாட்சியரை விரைந்து அனுப்பி தங்கப்புதையலைக் கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தத் தங்க நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக இது குறித்து ஆய்வு நடத்த தமிழ்நாடு தொல்லியல் துறையை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
![திருச்சியில் 505 தங்க நாணங்கள் புதையல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-05-gold-treasure-script-photo-7202533_26022020214830_2602f_1582733910_221.jpg)
திருச்சியில் பிரசித்திப் பெற்ற திருவானைக்காவல் கோயிலில் தங்கப்புதையல் கிடைத்திருப்பது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’