நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 494 பேர் மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்திருந்தனர்.
இதில் அரியலூர் 8, கோயமுத்தூர் 16, திண்டுக்கல் 39, ஈரோடு 44, காரைக்கால் 1, கரூர் 25, மதுரை 17, நாகப்பட்டினம் 25, நாமக்கல் 9, நிலகிரி 7, பெரம்பலூர் 15, புதுக்கோட்டை 80, சிவகங்கை 30, தஞ்சாவூர் 29, தேனி 26, திருச்சி 25, திருப்பூர் 17, திருவாரூர் 62, சேலம் 8, தருமபுரி 5, கிருஷ்ணகிரி 2, விழுப்புரம் 1, திருவண்ணாமலை 1, திருப்பத்தூர் 2 ஆகிய 24 மாவட்டங்களைச் சேர்ந்த 494 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையத்துக்கு இன்று வந்தனர்.
அவர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 12 சிறப்பு பேருந்துகள் மூலம் தகுந்த இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என அந்தந்த மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
இதனையடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேரும், சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: மேற்கு வங்கம் நோக்கி 1,476 பேருடன் சிறப்பு ரயில் புறப்பட்டது