திருச்சி: முசிறி அருகே தொட்டியம், பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு மேல்நிலைபள்ளியில் தொட்டியம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். தொட்டியம் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மவுலிஸ்வரன், அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் படித்துள்ளனர். அப்பொழுது சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கி போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சக மாணவர்கள் மவுலீஸ்வரன் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி கொண்டு மாணவன் மவுலீஸ்வரனை 3 மாணவர்கள் சேர்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவன் மவுலீஸ்வரன் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மவுலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மவுலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு தொட்டியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியில் மாணவர்களுடன் சிறிய பிரச்சினை ஏற்பட்டு 3 மாணவர்கள் சேர்ந்து மவுலீஸ்வரனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மாணவன் இறந்து விட்டான். பள்ளி மாணவனை தாக்கிய சக மாணவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் உயிரிழந்த மாணவன் குடும்த்தினருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் மூன்று மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பள்ளி வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இச்சம்பவத்தில் மாணவனை தாக்கியதற்காக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் பணியின் போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். சக மாணவர்கள் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஷார்ஜாவில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்.. கோவையில் குருவி சிக்கியது எப்படி?