திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கோவில்பட்டியில் மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான வாகனங்களில் வரும் நபர்கள் பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடுவதாகவும், இதனால் குடியிருப்பு பகுதிகளில் அச்சம் ஏற்படுவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, டி.ஐ.ஜி.உத்தரவின் பேரில், திருவெறும்பூர் கூடுதல் எஸ்பி பிரவீன் டோங்கேரே தலைமையில் தனிப்படை அமைத்து கடந்த சில நாட்களாக அப்பகுதியை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நள்ளிரவில் அதிரடியாக புகுந்து மனமகிழ் மன்றத்தில் சோதனை செய்தபோது, பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடுவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 20 பேரை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து ரூ.1.40 லட்சம், 11 இருக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்தில் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வளநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.