காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரை திறந்துவிட ஆணையம் உத்தரவிடுமா ? - Cauvery Water Management Authority
சென்னை : தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையமிட்ட உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை வலியுறுத்தியுள்ளது.
காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒன்பதாவது கூட்டம் அதன் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் இன்று நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அரசுகளின் சார்பாக அவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. மணிவாசன் , காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசன், "முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் நடந்த காவிரி ஒழுக்காற்றுக்குழுவின் 8 ஆவது கூட்டத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கெ திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை 1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள நீரையும் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பொழிவு காரணமாக, உபரி நீரை அணையிலிருந்து கர்நாடக அரசு திறந்து விடுகிறது.
தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த 9.19 டிஎம்சி நீரில் மீதமுள்ள நீரை வழங்க மீண்டும் உத்தரவிட வேண்டும்.
அதேபோல, தமிழ்நாட்டிற்கு சராசரியாக தரவேண்டிய நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விட வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு 2019ஆம் ஆண்டு அமைத்தது குறிப்பிடத்தக்கது.