மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நவம்பர் 7ஆம் தேதி தனது 66ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிற அவர், வழக்கமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிடுவார்.
ஆனால், இம்முறை தனது கட்சியினரை மக்கள் பணியில் ஈடுபடுத்தும் வகையில் நற்பணி தினமாகக் கொண்டாட கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையம் போன்ற ஆக்கப்பூர்வமான நற்பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடிய மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், "என் பிறந்த நாளை நற்பணி தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்" என கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த ட்விட்டர் பதிவு அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிட்ட அவரது கட்சி ஏறத்தாழ 4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.