மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக விவசாய அணி சார்பில் திருச்சியில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜ் தலைமை வத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் சிறுதானிய உற்பத்தி 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், வெறும் ஆறு ஆண்டுகால பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சியில் விவசாயத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்த விளைப்பொருள்களை தாங்களே இந்தியாவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் மூலம் இடைத் தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய முடியும். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள், அரசியல் காரணங்களுக்காக விவசாயிகளை திசைத் திருப்பி போராட்டங்களைத் தூண்டி விடுகின்றனர்.
தற்போது, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளர்ந்து வருகிறது. விவசாயிகளை திமுக, காங்கிரஸ் ஆட்சி தான் கடனாளியாக்கியது. அவர்களைக் கடனாளியாக்கிவிட்டு பின்னர் அரசியல் ஆதாயத்திற்காகக் கடனை தள்ளுபடி செய்தது.
விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள், பச்சை துண்டு அணிந்து திடீரென விவசாயிகள் போல நாடகமாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் முதலமைச்சரை முடிவு செய்யும் அதிகாரத்திற்கு பாஜக வரும். அதற்கடுத்த தேர்தல்களில் பாஜக முதலமைச்சர் நாற்காலியில் அமரும்" என்றார்.
இக்கூட்டத்தில் பாஜக விவசாய அணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.