மதுரை அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான பி.பி.இ உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்கு மணியிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (செப்டம்பர் 5) வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "உலக மக்களின் உயிர் பிரச்னையில் மக்களை கை கழுவ சொன்ன அரசு மக்களை கை கழுவி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது முறையற்றது. அவர் எதுகை மோனையாக பேசி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். மக்கள் உயிர் முக்கியம் இல்லை, தனது உயிர் தான் முக்கியம் என்று நினைத்து அவர் வீட்டை விட்டு வெளியே வந்தே 5 மாதத்திற்கும் மேலாகிவிட்டது.
மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியும். பொருளாதார தேவைகளுக்காகத் தான் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு நிதி தேவை என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் பசி என்கின்ற வார்த்தை எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.