கரோனா வைரஸ் பரவல் சர்வதேச அச்சுறுத்தலாக மாறி, கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலால் உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களைத் தாயகம் அழைத்துவர, மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற பெயரில் அரசின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மத்திய வெளியுறவுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மே 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை முதல்கட்ட மிஷனும், மே 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை இரண்டாம் கட்ட மிஷனும், ஜூன் 11ஆம் தேதி முதல் 30 வரை மூன்றாம் கட்ட மிஷனும், ஜூலை 15 முதல் 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட மிஷனும் செயல்படுத்தப்பட்டது. வரும் 5ஆம் தேதிமுதல் ஐந்தாம் கட்டதாக இந்த மிஷன் மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கிர்கிஸ்தான், ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களும், 751 சர்வதேச விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றின் விமானங்களும் இந்த மிஷன்களில் மத்திய அரசால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை மாத நிலவரப்படி, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிலிப்பைன் நாட்டிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 143 இந்தியா்களுடன் நேற்று (ஆகஸ்ட் 1) நள்ளிரவு சென்னை வந்தது. அதில் பயணம் மேற்கொண்ட 75 ஆண்கள், 65 பெண்கள், 3 சிறுவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கரோனா பரிசோதனை நடத்தினர்.
143 பேரில் ஆந்திரப் பிரதேசம், கா்நாடகாவைச் சேர்ந்த 7 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். இவா்கள் தவிர தமிழ்நாட்டைச் சோ்ந்த 136 பேரை 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவா்களில் 115 பேர் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவ கல்லூரிக்கும், 21 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர விடுதிக்கும் அனுப்பப்பட்டனர்.
வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூன் 6ஆம் தேதி முதல் இதுவரை வரை மொத்தமாக 344 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 127 விமானங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுவரை வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25 ஆயிரத்து 939 தமிழர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.