காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதியில் தொழிற்சாலைகளில் பயணப்படும் பயணிகள், சரக்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. அதேபோல, அதிகமாக சாலை விபத்துகளும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்கள் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, போக்குவரத்து சமிக்கை இல்லாததால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.
இதன் காரணமாக, சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகளில் போக்குவரத்து சமிக்கை அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்ற மாவட்ட நிர்வாகம், தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து சமிக்கை (ட்ராபிக் சிக்னல்) அமைக்கும் பணிகளை முன்னெடுத்தது.
அப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து, அந்த போக்குவரத்து சமிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகபிரியா மக்கள் பயன்பட்டிற்காக தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.