மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இடஒதுக்கீடு வழங்க ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரை செய்திருந்தது.
அதனை ஏற்ற தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென சட்ட முன்வரைவு ஒன்றை நிறைவேற்றியது.
பின்னர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து இந்தாண்டு முதல் 7.5% இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் பயிலும் ணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக வழக்குரைஞர் பினைய்காஸ் என்பவர் இந்த முறையீடு செய்துள்ளார்.
அந்த முறையீட்டில், "எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டும். ஏனென்றால், அரசுப் பள்ளிகளில் பயில்வோரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோம் ஒன்றே. அவர்களுக்குள் எந்த வேறுபாடுமில்லை.
எனவே, அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதியுள்ள மாணவ - மாணவிகளுக்கும் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த முறையீட்டை ஆராய்ந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதனை மனுவாக தாக்கல்செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.