விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையான இன்று (அக்.3) அதிகாலை சீனிவாச பெருமாளுக்கு 3 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அதிகாலை 5.30 கால சாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் காணிக்கைகளை வழங்க முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் புரிந்து தங்களது வேண்டுதல்களை சீனிவாசபெருமாளுக்கு கணிக்கையாக வழங்கினர்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக சீனிவாச பெருமாள் கோயிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முகக்கவசம் அணியாதவர்கள், 10 வயதிற்குள்ளான குழந்தைகள், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள், கோவிட் -19 அறிகுறிகள் கொண்டவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல, உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.