தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் செல்வன். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காரில் கடத்தப்பட்ட இவர் கொலைசெய்யப்பட்டார்.
பெரும் போராட்டத்திற்குப் பின் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சொக்கன்குடியிருப்பில் உள்ள இளைஞர் செல்வன் வீட்டிற்கு நேரில் சென்ற தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, உயிரிழந்த செல்வத்தின் மனைவி ஜீவிதாவிடம் ஐந்து லட்சம் ரூபாய் நிதியை உதவியாக அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான வன்முறைகள், மனித உரிமை மீறல், உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை அதிகரித்துவருகிறது.
இந்தக் குற்றங்களில் காவல் துறையினரும் இணைந்து கொலைசெய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற தலையீடு இருந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்தது.
அதேபோல, இந்தக் கொலை வழக்கிலும் நீதிமன்ற பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.