சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்களுடன், கோவிட்-19 பரவல் தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தற்போது சென்னை மாவட்டத்தில் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் எடுக்கப்பட்டுள்ளது ? இனிவரும் நாள்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் சென்னையில் பொதுமக்கள் முகக கவசம் அணிதல், தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வரும் நாள்களில் கடுமையாக்குவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் கோ.பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .