சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்புச் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 29 லட்சத்து 61 ஆயிரத்து 568 வாக்காளர்கள் உள்ளனர்.
14 லட்சத்து 82 ஆயிரத்து 124 பெண் வாக்காளர்களும், 14 லட்சத்து 79 ஆயிரத்து 280 ஆண் வாக்காளர்களும், 164 இதர வாக்காளர்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
குறைந்தபட்சமாக கெங்கவல்லி தனித் தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 224 வாக்காளர்களும், அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 58 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாவட்டத்திலுள்ள அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த அலுவலரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இந்தத் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகளும் தொடங்கப்படும்.
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரும் தங்களது சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்ய பரிந்துரைக்கலாம்.
அதற்கான விவரங்களைத் தெரிவிக்க அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்கெனவே கடிதம் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசியல் கட்சியினர் தங்களது வாக்குச்சாவடி முகவர்கள் விவரங்களைச் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி வாரியாக அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.