மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.6000/- வீதம் 3 தவணைகளாக வழங்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் துறை மூலமாக முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நிதி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.
இந்த நிதியை விவசாயிகளுக்கு நேரடியாக கொடுக்க நினைத்த மத்திய அரசு, இணையத் தளம் வழியே பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கியது. இந்த வழிமுறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்கள், துணையோடு விவசாயி என்ற பெயரில் போலி நபர்களின் பெயர்களைப் பதிவேற்றம் செய்தனர். இந்த முறைகேடு விளைவாக 40 லட்சம் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பதாகவும், அது குறித்து முழு விசாரணை நடைபெற வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், "இத்திட்டத்தில் அரசு அலுவலர்கள் துணையுடன் கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் இடைத்தரகர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
போலி விவரங்கள் கொடுத்து 13 மாவட்டச்களில் 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சி.பி சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கம்ப்யூட்டர் சென்டர்களில் விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட 80 அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் 110 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. தற்போது 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வருகின்ற மாதத்தில் இருந்து உண்மையான விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்" என தெரிவித்தார்.