மதுரை: இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவுதீன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு சுமார் 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 9.12 லட்சம் மடிக்கணினி வாங்கப்பட்டது.
இலவச மடிக்கணினியை பயன்படுத்தி பல அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி வருகின்றனர். இதனிடையே 2017-2018ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை.
இதையடுத்து 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் 2018-2019ஆம் ஆண்டு முதல் 2020 - 2021ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 2017-2018ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை.
இதனால், மாணவர்கள் கரோனா காலத்தில் இணையதளம் மூலம் பயில, தேர்வு எழுத மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே 2017-2018ஆம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில், ‘விடுபட்டுள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. இருந்தாலும், மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
விடுபட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை வைக்கிறது" என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.