பட்டிலியனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்ட நடைமுறைகள் தொடர்பாக கோயம்புத்தூரை சேர்ந்த வழக்குரைஞர் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "பட்டிலியனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கடந்த 1989 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு 2 முறையும், மாவட்ட அளவில் 3 மாதத்திற்கு 1 முறையும் கண்காணிப்பு குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.
அத்துடன், அச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. எனவே, கண்காணிப்புக் குழு கூட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் டியம் டேய் சார்பில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கடந்த 2019 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 8 ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நிர்வாக காரணங்களால் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டம் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படாத போதிலும், தலைமை செயலாளர் தலைமையில் சமூக நலத்துறை மற்றும் மனித உரிமை பிரிவு ஏ.டி.ஜி.பி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் முன்னிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆய்வு கூட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தேக்கம் குறைந்துள்ளதோடு அத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள், "இனி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டம்நடத்தப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.