விருதுநகர் மாவட்டம் பனைக்குடியைச் சேர்ந்த கடல்வண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், "எங்கள் ஊரான திருச்சுழி தாலுகா பனைகுடியில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி நரிக்குடி காவல் ஆய்வாளருக்கு மனு செய்திருந்தேன். ஆனால், காவல் துறையினர் அதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த விழாவை எங்களால் நடத்த இயலவில்லை.
தற்போது அக்டோபர் 2ஆம் தேதியன்று மகாத்மா காந்தி பிறந்தநாள், கர்மவீரர் காமராஜர் நினைவுநாள், பெரியார் பிறந்தநாள் ஆகிய மூன்றையும் இணைந்து கொண்டாடுவதற்காகவும், மரம் நடு விழா நடத்துவதற்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த விழாவில் நாங்கள் போதிய தகுந்த இடைவெளி போன்ற கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடனும் நடத்துகிறோம் என உறுதியளிக்கிறோம்.
எனவே நாங்கள் காந்தி ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்கு நரிக்குடி காவல் ஆய்வாளர், திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர், விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், விழா நடத்துவதற்கு காலம் குறுகியதாக இருப்பதால், இது குறித்து மனுதாரர் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.