நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தலைமைக் கணக்கராகப் பணியாற்றியவர் பெரியசாமி (55). 199 ஆம் ஆண்டில் தினக்கூலியாகப் பணியில் சேர்ந்த இவர், சில ஆண்டுகளில் பணியில் நிரந்தரமாக்கப்பட்டார்.
பின்னர், பதவி உயர்வு மூலமாகத் தலைமைக் கணக்கர் நிலைக்கு உயர்ந்தார். 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் சில ஆண்டுகளுக்கு முன் பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் நகலை (வேறொருவரின் பதிவு எண் கொண்ட மதிப்பெண் சான்றிதழ்) சமர்ப்பித்துள்ளார்.
அண்மையில், இது தொடர்பான எழுந்த புகார் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து, உதவி ஆணையர் பெரியசாமியின் பணிப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையில் சந்தேகம் எழுந்தது.
மேலும், அதில் இருந்த மதிப்பெண் சான்றிதழ் நகலை பெரியசாமி யாருக்கும் தெரியாமல் எடுத்து கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் கணக்கர் பணியிலிருந்து பதவி கீழிறக்கப்பட்டு, நரசிம்மர் கோயிலில் அர்ச்சனை சீட்டு வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டார்.
இந்நிலையில், சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய சென்னை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகத்திற்கு, பெரியசாமி வழங்கிய 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கிருந்து, நாமக்கல் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தது. அதனை ஆய்வு செய்தபோது அது போலி சான்றிதழ் என உறுதிசெய்யப்பட்டது.
சான்றிதழ் போலி என உறுதியானதை அடுத்து பெரியசாமி கடந்த மார்ச் 10ஆம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஐந்து மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விசாரணையில் நேற்று (அக். 02) அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்வதாக நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தமிழரசு உத்தரவிட்டார்.