கிராம ஊராட்சிகளின் சாலை வசதியை மேம்படுத்தும் விதமாக கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை மூலமாக மேற்கொள்ளப்படும் இப்பணியில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. ஊராட்சிகளுக்கான திட்டம் என்பதால் புறநகரில் நடக்கும் சாலைப்பணியை மாவட்ட அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலைகள் குறிப்பிட்டபடி அமைக்கப்படாமல் பெயருக்கு அமைக்கப்பட்டு பெரிய அளவில் முறைகேடு நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கூலம்பட்டியிலிருந்து புதுக்காமன்வாடி கிராமம் வரையில் கண்மாய்க்கரை வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரூ. 8.76 லட்சம் மதிப்பில் சில நாள்களுக்கு அமைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. 14ஆவது நிதிக்குழு மானியத்தின் மூலம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தகாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் விவசாய பணிக்காக வந்து செல்கின்ற இந்த சாலை ஒரு மழைக்கு கூட தாங்காத வகையில் பெயர்த்துக் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. நான்கு சக்கரம், இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்த அளவை விட மிகவும் குறைவான கனத்தில் தார் சாலை அமைத்துள்ள காரணத்தால் கைகளாலேயே பெயர்க்கும் அளவிற்கு தரமற்று உள்ளது.
எனவே, தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தரமான சாலை அமைக்க கூலம்பட்டி பொது மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு தார் சாலைகள் இது போன்று தரமற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.