நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக முருகன் (57) என்பவர் பணிபுரிந்துவந்தார்.
இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.
பி.சி.ஆர். மூலம் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்குத் தொற்று இல்லை எனக் காட்டப்பட்டுள்ளது, இருப்பினும் சிடி ஸ்கேன் மூலம் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த பத்து நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் முருகன் மருத்துவம் பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினர், சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நெல்லையில் கடந்த சில வாரங்களாக காவலர்கள் யாரும் தொற்றுக்கு ஆளாகாத நிலையில் தற்போது உதவி ஆய்வாளர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், கரோனாவுக்கு உயிரிழந்த முதல் காவல் துறை அலுவலர் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.