இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தியது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. அதைக் கொண்டு வந்தது பாஜக; ஆதரித்தது அதிமுக அரசு.
'மருத்துவக் கல்விச் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இனிமேல் 12ஆம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என்று நேரமில்லாத நேரத்தில் சட்டப்பேரவையில் நான் எழுப்பிய பிரச்னைக்கு முதலமைச்சர் பதிலளித்ததை “முதலமைச்சர் ஆவேசத்துடன் குற்றச்சாட்டு” என்று பத்திரிகைகளும் “தலைப்புப் போட்டு” செய்திகள் வெளியிட்டன.
நீட் தேர்வில் அதிமுக அரசின் - குறிப்பாக, முதலமைச்சர் பழனிசாமியின் துரோகத்தை - அவர் பா.ஜ.க.,வுடன் சேர்ந்து நடத்திய சூழ்ச்சியை - சதியை மாணவர்களும் மறக்க மாட்டார்கள்; நீட் தேர்வால் துயரப்படும் பெற்றோரும் மன்னிக்க மாட்டார்கள்.
பேரவை விதிகளை முறையாகப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, முதலமைச்சர் - ஒரு “பொய் ஆவேசத்தை”, வேடம் போட்டுக்கொண்டு விரல் நீட்டிக் காட்டி விட்டால் - நீட் தேர்வில் அ.தி.மு.க. அரசின் வரலாற்றுப் பிழையை - வரலாறு காணாத துரோகத்தை திரை போட்டு மறைத்து விடலாம்; தன் துரோகம் மறைந்து விடும் என்று நினைத்து, பகல் கனவு காண்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிருந்த போதே, அதாவது 18.7.2013ஆம் தேதி “நீட் தேர்வை” ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அந்தத் தீர்ப்பு வருவதற்கான வழக்குகளில், தி.மு.க. ஆட்சியிலிருந்த போது தொடுத்த தமிழ்நாடு அரசின் வழக்குதான் மிக முக்கியக் காரணம்.
2014 ஆம் ஆண்டுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது; நீட் வரவில்லை; நீட் தேர்வும் நடக்கவில்லை.2014-ல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அதற்கு அன்றிலிருந்து திரைமறைவிலும் பொதுவெளியிலும் அ.தி.மு.க. ஆதரவு அளித்து வந்தது. பிறகு கூட்டணியாகவே மாறியது.
பா.ஜ.க.,விற்கு உள்நோக்கத்துடன் ஒத்துழைப்பு கொடுத்ததன் விளைவாகவே 2016ஆம் ஆண்டில் நீட் மீண்டும் வந்தது.
நீட் தேர்வு மீண்டும் வரக் காரணம், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி; மாநிலத்தில் பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி; 2017-2018 ஆம் கல்வியாண்டில் தான் முதன்முதலில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவர்கள் மீது திணிக்கப்பட்டது. வரலாற்றுப் பிழை மட்டுமல்ல; சொந்தப் பாதுகாப்புக்காக, துரோக சரித்திரத்தையே உருவாக்கியிருப்பது எடப்பாடி பழனிசாமிதான்.
அலுவல் மொழியாகத் தமிழும் ஆங்கிலமும் தொடரும் என்று தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்ததைப் போலவும், நுழைவுத் தேர்வை ரத்து செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று - அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது போலவும், தமிழ்நாடு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது, தி.மு.க.வின் ஆதரவோடு ஒருமனதாக, நிறைவேற்றி அனுப்பிய “ஜல்லிக்கட்டு மசோதாவிற்கு” குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது போலவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட வழிகளைப் பயன்படுத்தி, சட்டப்பேரவையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தேவைப்படுங்கால் நீதிமன்றங்களின் ஆதரவைப் பெற்று நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் " என குறிப்பிட்டுள்ளார்.