தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் நேற்றிரவு (ஆகஸ்ட் 5) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இரவு முழுவதும் வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் தகர வீடுகள் சேதமடைந்தன. மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் கூடலூர், கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம் உள்ளிட்ட இடங்களில் வீசிய சூறைக்காற்றால் வாழை, தென்னை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதில் கூடலூர் அருகேயுள்ள வேலங்காடு, வெட்டுக்காடு பகுதிகளில் கூடலூரை சார்ந்த சேகர் மற்றும் சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழை மரங்கள் சேதமடைந்தன. பயிரிடப்பட்டு வெட்டும் தருவாயில் இருந்த வாழை மரங்கள் நேற்று இரவு அடித்த சூறாவளி காற்றின் வேகம் தாங்காமல் குலையோடு பெயர்ந்து நாசமாகின.
இதேபோல் கோம்பை பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன், செல்வம் ஆகிய விவசாயிகளின் செவ்வாழை, நாழிபூவன் போன்ற வாழை ரகங்களும்; பெரும் சேதத்தை விளைவித்தது. அதேபோன்று தேவாரம் பகுதியில் உள்ள தென்னை மரங்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. வாழை மரங்களின் சேத மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் நொடிந்துப் போயிருந்த விவசாயிகள் தற்போது சூறாவளி காற்றால் வாழை மரங்கள் விழுந்ததால் கூடலூர், கம்பம், வெட்டுக்காடு, கோம்பை மற்றும் தேவாரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். திடீரென அடித்த சூறாவளி காற்றினால் சேதமடைந்த வாழை மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் வீடுகள் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.