கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததால், நவம்பர் 9ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களின் கருத்து கேட்கப்பட்டது.
சில பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும், சில பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைக்கு திறக்கவேண்டியதில்லை என்றும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த இருவேறு கருத்துகளையும் கல்வித் துறை ஆராய்ந்து 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள், பள்ளி விடுதிகள் 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த குழப்பமான அறிவிப்புகள் குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது.
முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது அதிமுக அரசின் வழக்கமாகிவிட்டது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் பாதிப்பைவிட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன.
மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.