கடந்த செப்டம்பர் மாதம், வெளிநாடுவாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்த இணைய வழிக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனு ஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறியிருப்பதாகக் கூறி அதிலிருந்து சில ஸ்லோகங்களை எடுத்துரைத்துப் பேசியிருந்தார்.
அந்தக் காணொலியில் திருமாவளவன் பேசியதை அவரது சொந்தக் கருத்துகள் போல திரித்து பாஜகவினரும், சங்பரிவார அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
இதற்கு எதிர்வினையாக கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று ”மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீது அவதூறு பரப்பும் செயலில் சிலர் திட்டமிட்டு ஈடுபட்டுவருவதை எதிர்க்கொள்ளும் வகையில், "மகளிர் எழுச்சி! மக்கள் மீட்சி" எனும் பரப்புரை இயக்கம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரப்புரை இயக்கத்தை சைவத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கலையரசி நேற்று (நவ.03) தொடங்கி வைத்தார்.
பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் மனுவில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அவற்றைத் தொகுத்து, துண்டறிக்கைகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இந்தப் பரப்புரை இயக்கம் இரண்டாம் நாளாக நடத்தப்பட்டது.