திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா சாணாபுத்தூரைச் சேர்ந்த கே. விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சாணாபுத்தூர் கிராமத்தில் தொகுப்பு வீடு, கச்சா வீடு, கழிவறைகள் கட்டித்தருவது உள்ளிட்ட திட்டங்களில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளன.
சாணாபுத்தூர் நகராட்சி செயலாளர் பிர்லா, போலி பயனாளிகள் பட்டியல் தயாரித்து அரசுக்கு அனுப்பி இந்த மோசடியை செய்துள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சித் துறை, திருவள்ளூர் ஆட்சியருக்கு அனுப்பிய புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சித் துறை செயலாளர், திருவள்ளூர் ஆட்சியர், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சித் துறை இயக்குநர், கும்மிடிப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோர் குறித்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தது.