சென்னை புறநகர் பகுதியில் இறந்த இளம்பெண் மரணம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மருத்துவர் டக்கால் என்பவர் கலந்து கொண்டு பேசியதாக அறியமுடிகிறது.
அப்போது, "அப்பெண்ணின் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில் பல குளறுபடிகள் உள்ளது.்தடயவியல் துறையில் அனுபவம் அதிகம் கொண்ட டாக்டர்கள் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யாமல், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை செய்தது ஏன்? " என்று கேள்விஎழுப்பியிருந்தார்.
இதையடுத்து, இளம்பெண்ணின் வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ள உடற்கூராய்வு அறிக்கை குறித்து பொதுவில் பேசி வழக்கு விசாரணையில் குழப்பம் விளைவித்த மருத்துவர் டக்காலை ஒருமாதம் மருத்துவப் பணியில் இருந்து இடை நீக்கம் செய்வதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
மருத்துவ கவுன்சிலின் இந்த இடை நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் டக்கால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு தடை கேட்டு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ கவுன்சில் நடவடிக்கையில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஒரு மாதம் டாக்டர் தொழிலில் இருந்து டக்கால் விலகி இருப்பதில் தவறில்லை. எனவே, அந்த உத்தரவுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக வருகிற அக்டோபர் 29ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.