சென்னை : கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஐந்து காவல்துறை அலுவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருதினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருது தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டிற்கான விருதினை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட புனித தோமையார்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் மகுடீஸ்வரி.
திருச்சி மாவட்டம், முசிறி-துறையூரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் லதா. சேலம் மண்டலம் மத்திய புலனாய்வுப் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செல்வராஜூ. விருதுநகர் மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் சோ.சண்முகநாதன்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிவரும் தலைமைக் காவலர் சு.ராஜசேகரன் ஆகியோரின் கள்ளச்சாராய ஒழிப்புப் பணியைப் பாராட்டி, காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருது, முதலமைச்சரால் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் நாஎன்று நடைபெறும் குடியரசு தின விழாவன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.