திருவண்ணாமலை : மறைந்த தமிழ்த்திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.
தமிழ் இசையுலகின் 'கந்தர்வக் குரலோன்' எனப் புகழப்படும் பிரபல பின்னணி பாடகர் பத்ம ஸ்ரீ எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று (செப். 25) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம்வந்த மூத்த கலைஞர் எஸ்.பி.பி. வெறும் பாடகராக மட்டுமல்லாது திரை நடிகராக, இசையமைப்பாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக தனது திரையுலகப் பயணத்தை தொடர்ந்தவராவார்.

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாதிப்பு காரணமாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சையின் பலனாக அவருடைய உடல்நிலை தேறிவந்த நிலையில் செப்டம்பர் 24ஆம் தேதி மீண்டும் மோசமடைந்தது.

கடந்த 50 நாள்களுக்கும் மேலாக தொடர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று (செப்.25) மதியம் சுமார் 1.04 மணியளவில் அவர் உயிரிழந்தார். எஸ்பிபி.யின் மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
பாடகர் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா, , ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு… இதுக்கு அளவு இல்லை’ என்று கூறி தனது துயரத்தை வெளிப்படுத்தினார். மறைந்த எஸ்.பி.பியின் நல்லடக்கம் இன்று செங்குன்றம் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ணையில் நடந்துமுடிந்தது.
தீவிர ஆன்மீக நம்பிக்கையாளரான எஸ்.பி.பியின் ஆன்மா சாந்தியடைய அவரது நண்பரான இசைஞானி இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார். பஞ்பூதக் கோயில்களில் நெருப்பை குறிக்கும் திருவண்ணாமலை கோயிலில் வணங்கினால் சிவ மோட்சம் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.